கட்ட பொம்மன் மறைந்திருந்த அறையின் மர்மம், காற்று கூட நுழையாது..! உண்மையில் துரோகம் செய்தது யார், மறைக்கப்பட்ட மன்னன்…?

ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மறுத்ததற்காக, பல முறை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் கட்டபொம்மு ஆங்கிலேயர்களால் எச்சரிக்கப்பட்டான்.

அப்படியும், அவன் அடி பணிய மறுத்ததால், தூத்துக்குடியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பீரங்கிப் படையை அனுப்பி, கோட்டையில் பயங்கரப் போர் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர் ஆங்கிலேயர்.

அவர்கள் நோக்கம் கட்டபொம்மனை உயிருடன் பிடித்துக் கைது செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

இதை அறிந்த, கட்டபொம்முவின் மெய்க்காப்பாளர்கள், கட்டபொம்முவிடம் நிலைமையைச் சொல்லி, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிலிருந்து தப்பி விடுமாறு கெஞ்சினர். ஆரம்பத்தில், அதற்கு கட்டபொம்மு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனாலும், மெய்க்காப்பாளர்களின் வற்புறுத்தலால், தனது தம்பி ஊமைத்துரையுடன், மெய்க்காப்பாளர்களின் பாதுகாப்புடன், ஆங்கிலேயர்களின் கண்ணில் படாதவாறு, குதிரைகளில் ஏறித் தப்பிச் சென்றனர்.
கட்டபொம்முவைப் பிடிக்க முடியாத கோபத்தில், கோட்டையையும், அரண்மனையையும் தீக்கிரையாக்கினர்.

7-9-1799 அன்று கோட்டையிலிருந்து வடக்கு திசையில் உள்ள நாகலாபுரம் பாளையத்திற்குச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் கட்டபொம்மு சிறிது காலம் தங்கியிருந்தான்.
ஆனால், ஆங்கிலேயர்கள் கட்டபொம்முவை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தனர்.

அதனால், நாகலாபுரத்தில் இருந்தால், நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்று கருதிய கட்டபொம்மு, அங்கிருந்து கோலார்பட்டிக்குச் சென்றடைந்தான். அங்கும் சில நாட்கள் தங்கியிருந்தான்.

ஆங்கிலேயர்கள் கண்ணில் படாமல் தூரமாகச் சென்று பதுங்க நினைத்த கட்டபொம்மு, இறுதியாக, தனது நீண்ட கால நண்பனாக இருந்த புதுக்கோட்டையை நோக்கிப் பயணித்தான்.
விதி அங்கே தான் விளையாடியது.

கட்டபொம்மு அந்த இடத்தைத் தவிர்த்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள திருமலை போன்ற கோட்டைகளில் தங்கியிருந்தால், ஆங்கிலேயரிடம் பிடிபடாமல் இருந்திருக்கலாம், என்று இன்றும் பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டைக்குச் சென்ற கட்டபொம்முவை, விஜய ரகுநாதத் தொண்டைமான் வரவேற்று உபசரித்தான்.

கட்டபொம்மு, ஊமைத்துரை உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு வீரர்களையும், பாதுகாப்பாக திருமயம் கோட்டையில் தங்க வைத்தான்.
அது தான் அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது.

திருமயம் கோட்டைப் பகுதியில், புதுக்கோட்டைத் தொண்டைமானின் வீரர்கள் நூற்றுக்கும் அதிகமானோர், திருமயம் கோட்டையின் காவல் பணியில் இருந்தனர்.

எனவே, திருமயம் கோட்டையில் தங்கியிருப்பது தான் பாதுகாப்பு என்று கருதிய கட்டபொம்மு, தொண்டைமானின் வேண்டுகோளின் படி, திருமயம் கோட்டையில் தங்கியிருந்தான்.
திருமயம் மலைக் கோட்டையைச் சுற்றி பலமான உயரமான அரண்கள் உள்ளன.

கோட்டைக்குள் யார் இருக்கிறார்கள் என்பதை வெளியில் இருந்த யாராலும் எளிதில் கண்டு பிடிக்க இயலாது.

ஆனால், மனித இனங்களில் புல்லுருவிகள் நல்லவர்கள் போல், நடமாடிக் கொண்டிருக்கிறார்களே! அதனால் கட்டபொம்மு அங்கே பதுங்கியிருப்பதை,
ஆங்கிலேயர்களுக்கு, திருமயம் கோட்டையில் இருந்த சில கருங்காலிகள் மூலமாகத் தகவலை அறிந்த கலெக்டர் லூசிங்டன், தொண்டைமானுக்கு கடிதம் எழுதினான்.

கட்பொம்மு, தங்களது கோட்டையில் தங்கியிருப்பதாக எனக்கு செய்தி வந்திருக்கிறது. தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள்.

எனவே, கட்டபொம்முவை உடனே, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இல்லாவிடில், அவனது பாளையத்திற்கு நேர்ந்த கதி தான் உங்களுக்கும்” என்று மிரட்டலாகக் கடிதம் எழுதியிருந்தான்.

கடிதத்தைக் கண்ட விஜய ரகுநாத தொண்டைமான், சற்று யோசித்தான். ஆங்கிலேயர்களைப் பகைத்துக் கொண்டு தன்னால், அரசாள முடியாது என்றெண்ணிய அவன்.

கட்டபொம்முவைப் பிடித்து வைத்திருப்பதாகவும், உடனே, படைகளுடன் வந்தால், கட்டபொம்முவை ஒப்படைப்பதாக பதில் கடிதம் எழுதி அனுப்பினார்.

1-10-1799 அன்று மாலை 3 மணிக்கு, திருமயம் கோட்டைக்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மு, ஊமைத்துரை மற்றும் மெய்க்காப்பாளர்களை கைது செய்து, கொண்டு சென்றனர்.

ஆங்கிலேயருடன் தொண்டைமான் கைகோர்த்துக் கொண்டு தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டான் என்பதை உணர்ந்த கட்டபொம்மு, அவனது துரோகத்தை எண்ணிப் பொருமினான்.

கட்டபொம்மு, ஊமைத்துரை உட்பட அனைவரையும், சங்கிலியால் கட்டி வைத்துக் கொண்டு சென்றான் வெள்ளையன்.

கட்டபொம்மன் மற்றும், ஊமைத்துரை உட்பட அனைவரும் தங்கியிருந்த பகுதியை இன்றும் காணலாம். திருமயம் கோட்டையில் ஆயுதங்களைப் போட்டு வைத்திருக்கும் அறையில் தான் அவர்கள் தங்கியிருந்தனர்.

அந்த அறை இப்போது கூட ஒரு சிறைச்சாலை போலக் காட்சி அளிக்கிறது. அந்த அறையின் உள்ளே பார்க்கும் போது, பல சரித்திர நினைவுகள், நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.