தக்க சமயத்தில் டைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

ராய்ப்பூர்: பள்ளி குழந்தைகளோடு பெரும் பள்ளதாக்கை நோக்கி நகர்ந்த வாகனத்தை அதன் ஓட்டுநர், தன் உயிரை பணைய வைத்து காப்பாற்றியுள்ளார்.

தனியார் பள்ளி வாகனத்தில் 25 குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது வழியில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மலைப்பகுதியில்  இறக்கமான இடத்தில் வேன் நிறுத்தப்பட்டது.

அந்த வாகனம் முதல் கியரில் இருந்துள்ளது. ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே  அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன்,  கியரை பிடித்து விளையாடி நியுட்ரல் செய்துள்ளான்.

இதன் விளைவாக சற்றும் எதிர்பாராத வகையில் வாகனம் பின்புறமாக மலைபகுதியின் பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர் சிவ் யாதவ் ,  நின்ற இடத்தில் இருந்து வாகனத்தின் பின்புற டையருக்கு அடியில் மிகவும் லாவகமாக டைவ் அடித்து படுத்துள்ளார்.

இவர் ஒரு வேகத்தடை போல வாகனத்தின் அடியில் படுத்ததால் வாகனத்துக்குள் இருந்த 25  குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.  உடனடியாக குழந்தைகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் வாகனத்தில் இருந்த 25 குழந்தைகளும் சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிர் தப்பினார்கள். ஆனால் குழந்தைகளை காப்பற்றிய ஓட்டுநர் சிவ்யாதவ்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.